சென்னை: ‘பரதன்’ என புகழாரம் சூட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சசிகலா ஆதரவாக மாறும் வகையில், டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் என இரட்டை தலைமை நிலவி வருகிறது. இருவருக்கும் இடையே ஒற்றுமையில்லாத சூழலே நிலவி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக வெற்றிக்காக தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள நிலையில், துணைமுதல்வர் ஓபிஎஸ், தேர்தல் பிரசாரத்துக்கு செல்லாமல் மவுனம் காத்து வருகிறது. இது அதிமுக நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஓபிஎஸ் அமைதி குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. சசிகலாவுடன் ஓபிஎஸ் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ்க்கு அமமுக துணைப்பொதுச்செயலாளரான டிடிவி தினரகன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை சசிகலாவை அவரது தி.நகர் இல்லத்தில் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பரதனாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்தார். தற்போது அவர் மனகசப்பில் இருக்கிறார். சசிகலாவிற்கு மீண்டும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம் அவர் மீண்டும் பரதனாவார் என்று ஆசை காட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசியவர், சசிகலா நலமுடன் இருக்கிறார் வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று வீட்டில் அவரின் படத்திற்கு மரியாதை செலுத்துவார் என்றவர், .தற்போது அவர் மனகசப்பில் இருக்கும் ஓபிஎஸ், சசிகலாவிற்கு மீண்டும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம். அவர் மீண்டும் பரதனானார் என ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், அமமுகவை திமுகவின் பி டீம் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சிப்பது, சிரிப்பாக உள்ளதுஎன்றவர், மதுரையில் பொது இடத்தில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலை திறக்க அனுமதி அளித்த அதிமுக எந்த அணி என கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுகவைப் பார்த்தால் மக்கள் அச்சப்படுவதாக தெரிவித்தவர், திமுக ஒருபோதும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றவர், அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம் என்றும் கூறினார்.
அதிமுக அரசு சார்பில், முதல்வர் எடப்பாடியின் படத்துடன், வெற்றி நடைபோடும் தமிழகம் என்று விளம்பரங்கள் வெளியாகி வருகிறது. இதனால் விரக்தி அடைந்த ஓபிஎஸ், தனது சாதனைகள் குறித்து தனி விளம்பரம் செய்து வருகிறார். அவரது சமீபத்திய விளம்பரத்தில், பரதன் என்ற பெயரில் விளம்பரம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.