லக்னோ:

சில நகரங்களுக்கு ஆட்சியாளர்கள் சென்று வந்தால் பதவி இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுவதால் தற்போதும் பல அரசியல்வாதிகள் பீதியுடன் இதை தவிர்த்து வருகின்றனர்.

பதவி பறிபோக்கும் என்ற அச்சம் காரணமாக உ.பி.யில் நொய்டா உள்பட பல நகரங்களுக்கு அரசியல்வாதிகள் செல்ல அச்சப்படும் சூழல் நிலவுகிறது. சமீபத்தில் நொய்டாவுக்கு பிரதமர் மோடியும், முதல்வர் ஆதித்யநாத் யோகியும் சென்றிருந்தனர்.

இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ் வெளிப்படையான விமர்சனம் ஒன்றை மேற்கொண்டார். அதில், ‘‘நொய்டாவுக்கு சென்று வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நாங்களே சாட்சியாக இருக்கிறோம். தற்போது இருவர் நொய்டா சென்று திரும்பியுள்ளனர். என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்’’ என்றார்.

நொய்டா

வீர் பகதூர் சிங், என்.டி.திவாரி ஆகியோர் 1980ம் ஆண்டுகளில் நொய்டாவுக்கு சென்று வந்த சில மாதங்களில் முதல்வர் பதவியை இழந்தனர். அப்போது முதல் நொய்டாவுக்கு இப்படி ஒரு பெயர் பெற்றுள்ளது. ராஜ்நாத் சிங், முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் உ.பி முதல்வராக இருந்த காலகட்டத்தில் நொய்டாவுக்கு சென்றதில்லை.

நொய்டா மீதான இந்த மூட நம்பிக்கையை அகற்ற முயன்ற மாயாவதி 2012ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார். முன்னதாக நொய்டா மீதான இந்த மூட நம்பிக்கை மீது நம்பிக்கை இல்லை என்று கூறி வந்த அகிலேஷ், தற்போது தனது அரசியல் எதிரிகள் நொய்டாவுக்கு சென்று திரும்பியவுடன் இதை நம்ப தொடங்கியுள்ளார்.

அசோக்நகர்

அரசியல் வட்டாரத்தில் இது போல் பல நகரங்கள் மூட நம்பிக்கையில் சிக்கி தவிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி நொய்டாவில் நடந்த மெஜந்தா வழித்தட மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் கலந்துகொண்ட ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தானும் அசோக்நகர் மாவட்ட தலைநகருக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

இச்சவார்

ம.பி.யில் அசோக் நகர் மாவட்ட தலைநகருக்கும் இது போன்றதொரு மூட நம்பிக்கை உள்ளது. இதேபோல் சீகோர் மாவட்டம் இச்சவார் பகுதிக்கும் கடந்த 12 ஆண்டு பதவி காலத்தில் சவுகான் சென்றது கிடையாது. இங்கு சென்று வந்த முன்னாள் முதல்வர்கள் கைலாஷ் நாத் கட்ஜூ, த்வர்கா பிரசாத் மிஸ்ரா, கைலாஷ் ஜோஷி, வீரேந்திர குமார் சக்லேசா, திக் விஜய் சிங் ஆகியோர் பதவி இழந்தது தான் காரணமாக உள்ளது.

உஜ்ஜைனி

ம.பி. மாநிலம் கோவில் நகரமான உஜ்ஜைனில் ம.பி. முதல்வர்கள், அவர்களது குடும்பத்தினர் இரவு நேரத்தில் தங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதே நடைமுறையை சவுகானும் தற்போதும் பின்பற்றி வருகிறார். பகலில் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பிவிடுகிறார்.

தஞ்சை

இதேபோல் தமிழகத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் பிரதான நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் பதவி இழப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அல்லது உடல் நிலை பாதிக்கும், விபத்து ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இந்த பிரதான நுழைவு வாயில் வழியாக மறைந்த பிரதமர் இந்திராகாந்தி சென்றார்.

பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் இங்கு சென்று வந்த பின்னர் தான் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் எந்த விஐபி.யும் பிரதான நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்வதை தவிர்த்து வருகின்றனர். நாத்திகவாதியான திமுக தலைவர் கருணாநிதி கூட பக்கவாட்டு நுழைவு வாயில் வழியாக தான் கோவிலுக்குள் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.