டெல்லி:
சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வெளியான வதந்தியால் அதன் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் கோழி துறை 1,750 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. வதந்திகளை தடுக்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மத்திய கால்நடை பராமரிபுபு துறையிடம் கோழிப்பண்ணையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சீனாவில் இருந்து பரவி கொரோனா வைரஸ் உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவி வருவதாக சமீப நாட்களாக வாட்ஸ்அப் உள்பட சமூக வலைதளங்களிலும் வதந்திகள் பரவி வருகிறது.
இதனால் இந்தியாவில் கோழிக்கறி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. “சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளால் மக்களிடையே தவறான புரிதல் உருவாகியுள்ளது. கோழிகளில் வைரஸ் பரவியுள்ளதாகவும், அது மனிதர்களைப் பாதிக்கும் எனவும் அச்சுறுத்தப்பட்டுள்ளதால் சிக்கன் வாங்க மக்கள் தயங்குகின்றனர்” இதன் சிக்கன் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளதாக கோத்ரெஜ் அக்ரோவெட் லிமிடெட் தெரிவித்து உள்ளது.
இந்த வதந்தி காரணமாக கோழிப் பண்ணை விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கோழி ஒன்று ரூ.80 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.30க்கு கேட்கபதாக வருந்துகின்றனர்… கோழி வளர்ப்புக்கான செலவுகள் அதிகமாக இருக்கும் நிலையில், போதிய விலை கிடைக்காததால் சில விவசாயிகள் கோழி உற்பத்தியைக் குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதுபோல கடைகளிலும் கோழிக்கறி விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், விலையும் கிலோ ரூ.120, ரூ.130க்கு விற்பனையாகிறது…
இதற்கிடையில், ஐதராபாத்தில் டாங்க் பந்த் என்ற இடத்தில் பிராய்லர் கோழி விற்பனை நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில அமைச்சர்கள் கே.டி.ராமா ராவ், தலசானி ஸ்ரீனிவாஸ், எடிலா ராஜேந்தர் ஆகியோர் மேடையில் வைத்து சிக்கன் சாப்பிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில், கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் உள்பட அகில இந்திய கோழி வளர்ப்போர் சங்கத்தினர் சார்பில், மத்திய கால்நடை பராமரிப்பு துறையில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில், கோழிகளால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற போலி செய்திகளால் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 1,750 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக மத்தியஅரசு தங்களது நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், சிக்கன் மூலம் கொரோனா பரவுவதாக எழுந்துள்ள வதந்திகளை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.