கொழும்பு:
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட தபால் வாக்குப்பதிவு நேற்று (ஜூலை 13ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு 5 நாட்கள் நடைபெற உள்ளது. 7 லட்சம் அரசு அதிகாரிகள் தபால் வாக்கை செலுத்த உள்ளனர்.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று இலங்கையிலும் தாக்கத்தை வெளிப்படுத்தியது. இதனால், ஏப்ரல் 25ம் தேதி நடைபெற இருந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இறுதியாக ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தேர்தலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இலங்கையில் கொரோனா ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், தபால் வாக்கு போடும் பணி தொடங்கி உள்ளது. அரசு ஊழியர்கள், காவல்துறையினர் போன்றோர் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல்கட்டமாக ஜூலை 13ந்தேதி முதல் 17ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தபால் வாக்கு போட முடியாதவர்களுக்கு அடுத்த வாரம் 2 நாட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தபால் வாக்குகள் போட தகுதியானர்வர்கள். அவர்களின் வாக்குகளை பெறும் வகையில் தபால் வாக்குக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று முதன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225 ஆகும், வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 1 கோடியே 60 லட்சம் பேர் ஆவர்.