உடுமலைப்பேட்டை: பிளஸ்2 மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது தொடர்பான புகாரில், உடுமலையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் கைது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே பல ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது உடுமலையில் பள்ளி மாணவிக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச செய்தி அனுப்பிய தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கரட்டுமடம் என்ற பகுதியில் அரசு உதவிப்பெறும் பள்ளியில் படித்து பரும் 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, தீபலாப்பட்டியைச் சேர்ந்த அசோக் குமார் என்ற தமிழ் ஆசிரியர், வாட்ஸ் அப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதை மாணவி யாரிடமும் கூறாத நிலையில், எதேச்சையாக அவரது மொபைலை ஆய்வு செய்த அவரது பெற்றோர், அதில் இருந்த தகவல்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது தொடர்பாக 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணிற்கு அழைத்து இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கதிர்வேல் உடுமலைப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியர் அசோக்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியிடம் ஆபாசமாக பேசி வந்ததும் தனிபட்ட முறையில் அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆசிரியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த உடுமலை மகளிர் காவல் நிலைய போலீசார் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.