ரோம்: வாடிகனில் நடைபெறும் ஈஸ்டர் வார பிரார்த்தனை நிகழ்வில் யாரும் பங்கேற்க வேண்டாமென்று போப்பாண்டவரின் நிர்வாக அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
போப் நிர்வாக அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா வைரஸால், உலகளாவிய பொது சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், ஈஸ்டர் புனித வாரத்தின் அனைத்து வழிபாட்டு கொண்டாட்டங்களும் பிரார்த்தனைகளும் பங்கேற்பாளர்களின்றி நடைபெறும்.
ஏப்ரல் 12ம் தேதி வரையிலான பிரார்த்தனைகள், வாடிகனின் அதிகாரப்பூர்வ செய்தி இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். மக்கள் அதில் பிரார்த்தனையைக் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஈஸ்டர் வார பிரார்த்தனை நிகழ்வில், ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு கொரோனா வைரஸ் அனைத்தையும் புரட்டிப்போட்டுவிட்டது.
உலகளவில் கொரோனாவால் சீனாவுக்கு அடுத்து மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில், இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதுடன், மொத்தம் 20000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றியிருப்பது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.