போப் பிரான்சிஸ் உடல்நிலை “சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது” என்றும் இரவுப் பொழுதை இனிமையாக கழித்ததாகவும், இன்று காலை எழுந்து காலை உணவை உட்கொண்டதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

88 வயதான போப், பல நாட்கள் சுவாசக் கஷ்டங்களால் போராடி வரும் நிலையில் பிப்ரவரி 14 அன்று ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரட்டை நிமோனியா என்பது ஒரு தீவிரமான தொற்று ஆகும், இது இரு நுரையீரல்களையும் வீக்கப்படுத்தி வடுவை ஏற்படுத்தும், இதனால் சுவாசிக்க கடினமாக இருக்கும்.

இந்த நிலையில் போப் பிரான்சிஸ் உடல்நிலை சற்று முன்னேறி வருவதாக தொடர்ந்து இரண்டாவது நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது “இரத்த இயக்கவியல் (ஹீமோடைனமிக்) அளவுருக்கள் தொடர்ந்து நிலையானதாக உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீமோடைனமிக் அளவுருக்கள் என்பது உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்கள் வழியாக இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் திறனைக் குறிக்கிறது.

போப்பிற்கு பாலிமைக்ரோபியல் தொற்று இருப்பதாக வத்திக்கான் முன்பு கூறியிருந்தது, இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நுண்ணுயிரிகள் சம்பந்தப்பட்டிருக்கும் போது ஏற்படுகிறது, மேலும் “சிக்கலான மருத்துவ சூழ்நிலையை” சமாளிக்க தேவையான வரை அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில் போப் பிரான்சிஸ்-க்கு வென்டிலேட்டர் உதவி எதுவும் தேவைப்படவில்லை என்றும், அவர் தானாகவே சுவாசித்துக் கொண்டிருப்பதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

இருந்தபோதும், போப் பிரான்சிஸ் விரைவில் நலம்பெற வேண்டி ரோம் நகரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.