வாடிகன்: உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், போப் உடல்நிலை தேறி வரும் நிலையில், அவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சர்ச்சின் திருப்பலி ஒன்றில் கலந்துகொண்ட தற்போதைய புதிய புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.
88 வயதான கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் வயது முதிர்வு காரணமாக சமீப காலமாக சுவாசம் விடுவதில் கஷ்டப்பட்டு வந்தார்.. இதையடுத்து, பிப்ரவரி கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் போப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட்டு இருப்பதாகவும், நிமோனியா பாதிப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், அவரது நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைடுத்து அவரது நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக கூறப்பட்டது. பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் காரணமாக, அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து வரும் புகைப்படத்தை கத்தோலிக்க தலைமை நிலையமான வாடிகன் வெளியிட்டு உள்ளது.
88 வயதான போப் பிரான்சிஸ் இரட்டை நிமோனியாவால் கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அவரது எந்தவொரு புகைப்படமும் வெளியாகாத நிலையில், அவரது முதல் படத்தை மார்ச் 16ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வாடிகன் தலைமையகமாக வெளியிட்டுள்ளது.
நற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்ட இந்தப் படத்தில், மருத்துவமனையில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய பிறகு, பிரான்சிஸ் பின்னால் இருந்து பலிபீடத்தை நோக்கி நிற்கிறார்.
சிகிச்சை முழுவதும் ஆக்ஸிஜனைப் பெற்று வரும் போப்பாண்டவர், புகைப்படத்தில் தாமாகவே சுவாசிப்பது போல் தெரிகிறது. போப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, மார்ச் 6 அன்று அவர் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. அதில், சோர்வடைந்த பிரான்சிஸ் தனது குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதைக் கேட்க முடிந்தது.
இந்த நிலையில், தற்போது அவர் நலமோடு இருப்பது போன்ற புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது. இது கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே மகிழ்ச்சியை ற்படுத்தி உள்ளது. பிரான்சிஸின் கடைசிப் படம் ஒரு மாதத்திற்கும் மேலாக வெளியிடப்பட்டதால், பத்திரிகையாளர்களும் விசுவாசிகளும் போப்பின் படங்களைக் கேட்டு வருகின்றனர் என்று வாடிகன் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் போப்பின் உடல்நிலை குறித்து, “நிலைமை சீராக உள்ளது” என்றும், ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதிரியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாகவும் அறிக்கை கூறியுள்ளது.
மருத்துவர்கள் போப் பிரான்சிஸ்க்கு உடல் நலம் தேறி வருவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்றும், ஆனால், அவரது வயது, உடல் உறுப்புகள் இயக்கம் மற்றும் நுரையீரலின் ஒரு பகுதியை இழந்ததால் அவரது நிலை சிக்கலானதாகவே தொடர்கிறது என்றும் எச்சரித்துள்ளனர். இருப்பினும், போப் தனது கடமைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை, ரோமன் கத்தோலிக்க திருச்சபையை மேலும் வரவேற்கத்தக்கதாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சீர்திருத்தத் திட்டத்திற்கான மூன்று ஆண்டு செயல்படுத்தல் மற்றும் மதிப்பீட்டு செயல்முறைக்கு அவர் ஒப்புதல் அளித்தார். மேலும் பிரான்சிஸ் கடந்த வாரம் நாட்காட்டியை அங்கீகரித்ததாக வாடிகன் தெரிவித்துள்ளார்.