கான்பூர்:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் ஹவுராவில் இருந்து டெல்லி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான. இதில், அந்த பெட்டிகளில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர். நள்ளிரவு 1 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஹவுராவில் இருந்து புடெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த பூர்வா எக்ஸ்பிரஸ் விரைவு ரெயில் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் அருகே வந்துகொண்டிருந்த போது, ரெயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அய்யோ, அம்மா என்று கூக்குரலிட்டனர்.
இந்த விபத்து கான்பூர் அருகே உள்ள ரூமா என்ற கிராமப்புற பகுதியில் நடைபெற்றது. மக்களின் அலறல் சத்தத்தை கேட்ட கிராம மக்கள் விரைந்து வந்து பயணிகளை மீட்டனர். அதற்குள் விரைந்து வந்த மீட்புக் குழுவினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 5 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தண்டவாளம் சீர் செய்யப்பட்டுவருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.