விவசாயி வீட்டு மின்சார கட்டணம் ரூ.10 கோடி ..

மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக நுகர்வோர் ஆங்காங்கே நீதிமன்றங்களில் ஏறி நியாயம் கேட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம்.

’’ஊரடங்கு என்பதால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள் அதிக அளவில் மின்சாரத்தைப் பயன் படுத்தியுள்ளனர்’’ என்று மின்சார வாரியம் பதில் அளித்து வருகிறது.

இந்த நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு 10 கோடி ரூபாய்க்கு மின்சார ரசீது அனுப்பி, அவரை  மூர்ச்சையாக்கி உள்ளது அங்குள்ள மின்சார துறை.

எல்லையில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் குஹ்ரியன் ஷேக்லியன் என்ற கிராமத்தில் வசிக்கும் முகமது ஹனீஃப் என்ற ஏழை விவசாயி வீட்டுக்குத்தான் இந்த மின் கட்டண ரசீது அனுப்பப்பட்டுள்ளது.

குத்து மதிப்பாக இல்லாமல், ‘’ 10, 08, 38, 139’’ ரூபாய்  என அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ’’ இது கம்யூட்டர் தவறாக இருக்கும். மின்சார மேம்பாட்டுத் துறையிடம் முறையிட்டு, தவறு,  சரி செய்யப்படும்’’ என்று தெரிவித்துள்ளார், பூஞ்ச் மாவட்ட ஆணையாளர் ராகுல் யாதவ்.

-பா.பாரதி.