மும்பை
விமான நிலையத்தில் பயணிகளுக்கு அளிக்கப்படும் உணவில் மீதமானது ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மும்பை மற்றும் டில்லி விமான நிலையங்களில் ஒவ்வொரு நாள் காலையில் 200 சாண்ட்விச்சுகள், 100 வெஜிடபிள் ரோல்கள், மற்றும் 50 குளிர் பானங்கள் ஆகியவை இருப்பில் வைக்கப்படுகின்றன. விடியற்காலையில் விமானம் ஏற வரும் பயணிகள் தாமதிக்கப்பட்டால் இந்த உணவுகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஆனால் விமான தாமதம் முன் கூட்டியே அறிவிக்கப்பட்டால் பல பயணிகள் விமான நிலையத்துக்கு வருவதில்லை. அப்போது இந்த உணவு மீதமாகி விடுகிறது. அதே நேரத்தில் திடீரென அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்படும் போது இந்த உணவுகள் தீர்ந்து போய் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. பொதுவாக மீதமாகும் நிலையே தினமும் உள்ளது.
இந்த உணவு முன்பு குப்பையில் கொட்டப்பட்டு வந்தது. ஆனால் தற்போது டிராவல் ஃபுட் சர்வீஸ் என்னும் தொண்டு நிறுவனம் அந்த மீதமாகும் உணவை விமான நிலையங்களில் இருந்து எடுத்துச் செல்கிறது டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இந்த நிறுவனம் 70 உணவகம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து எடுத்துச் செல்கிறது. இந்த நிறுவனம் உணவக மையம் என்னும் ஓரிடத்தை அமைத்துள்ளது.
அந்த இடத்தின் அருகில் உள்ள பல ஏழைகளுக்கு குறிப்பாக ஏழைக் குழந்தைகளுக்கு இந்த மீதமான உணவுகள் வழங்கப்படுகின்றன. தற்போது மும்பை மற்றும் டில்லி நகரங்களில் மட்டும் இயங்கி வரும் இந்த சேவையை பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் கோவா விமான நிலயங்களிலும் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மும்பை மற்றும் டில்லி நகர விமான நிலையங்களில் இருந்து மாதம் சுமார் 3000 உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்த தன்னார்வு தொண்டு நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு அன்கிட் கவத்ரா என்பவரால் தொடங்கப்பட்டதாகும். ஒரு திருமணத்தில் ஏராளமான உணவு மீதம் ஆனபோது இந்த எண்ணம் அவருக்குத் தோன்றி உள்ளது. அன்று மீதமான உணவை ஏழைகள் விரும்பி உண்பதைக் கண்ட அவர் இந்த நிறுவனத்தைத் தொடக்கி பலரின் பசியை போக்கி வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து எடுத்து வரப்படும் இந்த உணவு கெட்டுப் போகவில்லை என்பதை உறுதி செய்த பிறகே இந்த விநியோகம் நடைபெறுகிறது. அரசு உதவி பெறாத மற்றும் மதிய உணவுத் திட்டம் செயல்படாத பள்ளிகளில் படிக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு இந்த உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் உணவு குறித்த கவலை இன்றி ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க முடியும் என கவுத்ரா தெரிவித்துள்ளார்.