மயிலாடுதுறை: பூம்புகார் சுற்றுலா மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் , மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கவர்னர் மாளிகை 4 கோடியே 35 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், டேனிஷ் கோட்டை 3 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலா வளாகம் 23 கோடியே 64 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் புதுப்பிக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தரங்கம்பாடியில் கவர்னர் மாளிகை, டேனிஷ் கோட்டை, பூம்புகார் சுற்றுலா வளாகம் ஆகியவை, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகார் சுற்றுலா வளாகம் முத்தமிழறிஞர் கலைஞரால் கட்டப்பட்ட பூம்புகார் கலைக்கூடம் புதுப்பித்தல், 1,400 மீட்டர் சுற்றுச்சுவர் அமைத்தல், வரவேற்பு பகுதிகள், வாகன நிறுத்துமிடம், உலாவும் சாலை அமைத்தல், பொருள் வைப்பறை, தகவல் மையம், சிலைகள் அமைத்தல், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துதல், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிடப்பட்டது.
மேலும், தரங்கம்பாடியின் சிறப்பு அம்சமான டேனிஷ் கோட்டையானது 1620- இல் கட்டப்பட்டுள்ளது. இதனை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் தரத்தினை ஆய்வு செய்து, ஒப்பந்த கால கெடுவிற்குள், பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், சுற்றுலா பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. முதலமைச்சரின் சீரிய முயற்சிகளால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்றதன் காரணமாக விரைவான வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 52 வகையான பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதன வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பேருந்துகள், அதிநவீன உயர்தர சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பேருந்துகள் என மொத்தம் 14 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 26 ஹோட்டல்களை நேரடியாக நிருவகித்து வருகின்றது. இவற்றில் 492 குளிரூட்டப்பட்ட அறைகளும், 188 சாதாரண அறைகளும், மலைப்பகுதி சுற்றுலாத்தளங்களில் 172 அறைகளும் என மொத்தம் 852 அறைகள் உள்ளன. மேலும், இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து திருவண்ணாமலை, இராமேஸ்வரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஆலயம் என்ற பெயரிலான உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதிகள் 160 சாதாரண அறைகளும், 157 குளிரூட்டப்பட்ட அறைகள் என மொத்தம் 317 அறைகளுடன் செயல்பட்டு வருகின்றன. ஹோட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், ஆலயம் தங்கும் விடுதிகள் என்ற இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 1,169 அறைகளுடன் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அளவிலான தங்கும் வசதி சேவையை சுற்றுலா பயணிகளுக்கு அளித்து வருகின்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில், பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி பகுதியில் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து கண்காணித்து விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது முதல் கட்ட விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்த கட்ட பணியில் முழுமையாக மேம்பாட்டு பணிகள் முடிவுற்று வரலாற்று சிறப்புமிக்க சின்னமாக அமைக்கப்படும். மேலும் சுற்றுலா தளத்தில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றநடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் விடுதி உள்ளிட்ட அத்தியாவசியை தேவைகள் விரைவில் அமைத்து தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.