சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரை வேலூர் மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், இந்த வழக்கில் படுமோசமான விசாரணை நடைபெற்றுள்ளது என தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சென்னை  உயர்நீதிமன்றம், வேலூர் நீதிமன்றம் மற்றும் தற்போதைய லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர், பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 2001-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், 2002-ம் ஆண்டு பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் 172 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி வசந்த லீலா, போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி, பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.

இந்த நிலையில்தான், மேற்கண்ட வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இவ்வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இதுவரை நான் பார்த்ததில் படுமோசமாக விசாரிக்கப்பட்டதால்தான் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன். இந்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடுகிறேன்” என்று கூறி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போதைய திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் பொன்முடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கால், அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.  நீதி வளைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், திமுக அரசு மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.