சென்னை:

மிழகத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நீதிமன்றம் நியமனம் செய்தது, மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறினார்.

தமிழகத்தில் நடைபெற்று வந்த சிலை கடத்தல் மற்றும் சிலை மாற்றப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன் மாணிக்க வேலையே ஓய்வு பெற்ற பிறகும், ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் நியமித்தது அதிகார வரம்பு மீறல். குறிப்பிட்ட  துறை சார்ந்த விசாரணை அதிகாரியை நியமிப்பது அரசின் உரிமை.

தமிழக அரசின் உரிமையை பறிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் செயல்பட்டு உள்ளது. நீதிமன்றங்கள் குறிப்பிட்ட வழக்குகளை மேற்பார்வையிடுவதற்கு வேண்டுமானால் நீதிமன்றம் அதிகாரியை நியமிக்கலாம்.  வழக்கு தொடர்பான சரியான ஆய்வுகள் இல்லாமல் பொன் மாணிக்கவேல் செயல்படுபவராக இருப்பதால் அவரை எதிர்க்கிறோம் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும்,  குஜராத்தைச் சேர்ந்த சாராபாய் என்ற 95 வயது பெண் நடத்தும் அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளை, கடத்தல் சிலைகள் எனக் கூறி வழக்கு பதிவு செய்துள்ளார். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்பதால் பொன் மாணிக்கவேலின் தவறுகளை நீதிமன்றம் கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டியவர்,  பொன் மாணிக்கவேல் மீது சக போலீசார் 60 பேர் புகார் அளித்துள்ள னர். அதிகப்படியான நம்பிக்கை காரணமாக அவர் மீது உயர்நீதின்றம் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும்  தமிழக அரசு சார்பில் வாதாடிய  வழக்கறிஞர் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம்,  இந்த வழக்கைப் பொருத்தவரை அதிகாரி பொன் மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா என்பதை நாங்கள் பார்க்கப் போவதில்லை. அவரது நியமனம் சரியா, தவறா? என்பதை மட்டுமே பார்க்கப்போகிறோம்” என்று தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.