சென்னை: நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகை இல்லாமல், பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கன் ஜனவரி 3ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது. இதற்காக அரசு 250 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது, அத்துடன் பொங்கல் தொகுப் புடன் இலவச வேஷ்டி-சேலைகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வாரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் இலவசமாக பொங்கல் செலவினங்களுக்காக ரூ.1000 வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நிதிச்சிக்கல் காரணமாக, பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்படவில்லை. இது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் ஜன வரி 9-ந்தேதியில் இருந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான டோக்கன் ஜனவரி 3ந்தேதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வினியோகிக்க டோக்கன் அச்சடிக்கப்பட்டு தயாராகி வருகிறது. இன்றைக்குள் அந்த பணிகள் முடிவடைந்து விடும் என கூறியுள்ள அதிகாரிகள், இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மண்டல அளவிலான கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் ரேஷன் கடை அதிகாரிகளுக்கு தக்க ஆலோசனை கள் வழங்கப்பட உள்ளது அத்துடன் டோகன் வழங்குவது குறித்தும் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்புக்காக ரேசன் கடை ஊழியர்கள், வரும் 3ந்தேதி முதல் மூலம் வீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அந்த டோக்கனில், நாள், நேரம் குறிப்பிட்டு வழங்கப்படும், அதனப்டி, காலையில் 100 பேர், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.