புதுச்சேரி: கோடை விடுமுறைக்கு பின்பு புதுச்சேரியில் ஜூன் 23ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரி யிலும் ஒரே வகையிலான பாடத்திட்டம் செயலில் உள்ளதால், புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்ட வந்தது.

இந்த நிலையில், இன்று  செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி  கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்  பள்ளிகள் திறப்பு தேதிகளை  அறிவித்தார்.  அதன்படி, புதுவையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 23-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. பிளஸ்-2 வகுப்புகளும் அன்று திறக்கப்படவுள்ளது. பிளஸ்-1 வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

முன்னதாக  புதுவை ஆளுநா், முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பள்ளிகள் திறப்பு, கல்வி கட்டணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. அதில்,   தமிழகத்தில் பள்ளி தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வரும் புதுவையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அரசு அறிவிக்க வேண்டும். வரும் கல்வியாண்டுக்கான முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்விக் கட்டணத்தை அறிவிக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை கல்விக் கட்டணத்தை அறிவித்த பிறகே, தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டுமென ஆணையிட வேண்டும். அதிக கல்விக் கட்டணம், நன்கொடை வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவா்களை நோட்டு புத்தகம், சீரூடை வாங்க தனியாா் பள்ளிகள் கட்டாயபடுத்தக் கூடாது. அதேபோல, பள்ளியில் நோட்டு புத்தகம், சீரூடை, காலணி போன்றவற்றை விற்கக் கூடாது என  குறிப்பிடப்பட்டிருந்தது.