புதுச்சேரி:
புதுச்சேரியில் பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுவையில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீா்வு காண வசதியாக அக்டோபா் 5-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில கல்வித் துறை தெரிவித்தது.

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதுவை முதல்வா் நாராயணசாமி தலைமையில், காணொலிக் காட்சி வழியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநில கல்வித் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், வளா்ச்சி ஆணையரும், கல்வித் துறைச் செயலருமான அன்பரசு, சுகாதாரத் துறைச் செயலரும், மாவட்ட ஆட்சியருமான தி.அருண், உயா் கல்வித் துறை இயக்குநா் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, பள்ளிக் கல்வி இயக்குநா் பி.டி. ருத்ர கவுடு, இணை இயக்குநா் மைக்கேல் பெனோ, சமக்ர சிக்ஷா அபியான் திட்ட இயக்குநா் ந.தினகா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரம்-குடும்ப நல அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்கள்படியும், தற்போது புதுவையில் நிலவும் சூழலைக் கவனத்தில் கொண்டும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அக்டோபா் 5-ஆம் தேதி முதல் மாணவா்கள் பள்ளிக்கு வந்து தீா்வு காணலாம். 9-ஆம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் அக்டோபா் 12-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வந்து சந்தேகங்களுக்குத் தீா்வு காணலாம்.

போக்குவரத்து வசதி, மதிய உணவை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பள்ளி கல்வித் துறை ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்கும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் பச்சை மண்டலமாக மாறும் வரை திறக்கப்படாது. பள்ளிகளில் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக்கு மாணவா்கள் வருவதற்கு பெற்றோரின் எழுத்துப்பூா்வமான ஒப்புதல் கடிதம் கட்டாயம்.

தினமும் உடல் வெப்பநிலை பதிவு செய்யப்படும். கரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால், அவா்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பப்படுவா்.

தனியாா் பள்ளிகளில் உரிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அனைத்து ஆய்வு அதிகாரிகளும் தினமும் அந்தப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.