விக்கிரவாண்டி
இணைய வழி கண்காணிப்புடன் இன்று காலை 7 மணிக்கு விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடக்கியது. வாக்குப்பதிவிற்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் காணொலி வழியாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமைச்செயலகத்தில் இருந்தபடி நேற்று ஆலோசித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம்,
”விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் இணையவழியில் இணைக்கப்பட்டுள்ளன.
அந்த கேமராக்கள் மூலமாக காட்சிகளை பார்வையிட்டு, வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இருந்து இடைத்தேர்தல் வாக்குப்பதிவை கண்காணிக்க முடியும்.
இந்த தேர்தலுக்காக 3 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பிற்காக ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.”
என்று தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.