சென்னை:
பொள்ளாச்சி பாலியல் தொடர்பான வழக்குகளை பெண் சிபிஐ அதிகாரிகளைக்கொண்டு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியம் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது.
தற்போது வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், பெண் சிபிஐ அதிகாரிகளை கொண்டு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராதிகா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வழக் கில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புலன் விசாரணை நடத்தினர். பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டுக்கு சாதாரண உடையில் சென்று விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற விதிகளை காவல் துறையினர் பின்பற்றவில்லை.
மேலும், புதிதாக வெளியான நான்கு வீடியோக்கள் தொடர்பாக தனி தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை சி.பி.ஐ. பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.