கோவை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணை கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதையடுத்து வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் ஒரு கும்பம் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் மிரட்டி பணம் பறித்து வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பொதுமக்களின் குலைநடுங்க வைத்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான குற்றச்சாட்டில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் காவல் முடிவடைந்த நிலையில், குற்றவாளிகள் 5 பேரும், கோவை மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் முன்பு இன்று ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஏ.எஸ்.ரவி, 5 பேரின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 11ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டதுடன், வழக்கை கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.
புதிய நீதிமன்றத்தில் பிப்ரவரி 11-ம் தேதி முதல் வழக்கு விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.