தாரா:
அரசியலில் சுனாமி வந்து கொண்டிருக்கிறது என குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு பிரசாரம் செய்து வரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. அங்கு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக ராகுல் காந்தி குஜராத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு குஜராத் மாநில மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் தாராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது, குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என யாரும் வரலாம். ஆனால் வரும் தேர்தலுக்கு பிறகு இங்கு பாஜக அரசு நிச்சயம் இருக்காது.
கடந்த 22 ஆண்டுகால பாஜக அரசை மக்கள் சகித்து கொண்டனர். ஆனால் இனிமேலும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
மோடி அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு என்பது கருப்பு பண திருடர்களுக்கு உதவக் கூடியதாக உள்ளது. அது 18 சதவிகிதத்திற்குள் இருக்க வேண்டும். இந்த “காபார் சிங் வரி” வரி காரணமாக மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. தற்போதைய நிலையில், நாட்டில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியிருக்கவே கூடாது என்று கூறினார்.
மேலும், குஜராத்தில் வெற்றி பெறும், விரைவில் அரசியல் சுனாமி வர இருக்கிறது. அந்த சுனாமி காரணமாக குஜராத்தில் பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.