பொலிடிகல் பொக்கிஷம்: பகுதி ஒன்று: 
நீங்கள் அறிந்த பிரபலங்கள்.. அறியாத ரகசியங்கள் இந்த பகுதியில் தொடர்ந்து வெளியாகும். அறியாத என்றால், யாருக்கும் தெரியாதது என்றல்ல… ஆதாரத்தோடு எழுதப்பட்ட புத்தகங்களில் இருந்து.. நீங்கள் படித்திராத புத்தகங்களில் இருந்து.. நமக்காக பல்வேறு புத்தகங்களைத் தேடித்தேடி படித்து எழுதுபவர் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் ஆர்.சி. சம்பத். 

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் மனோகரன்

மறைந்த நாஞ்சில் மனோகரன், தான் எழுதிய ‘மேடும் பள்ளமும் நூலில் சொல்கிறார்;
‘எனது திருமணம் 1960-ல் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அண்ணா அவர்கள் தான் திருமணத்திற்கு தலைமை வகித்து நடத்தித் தர  வேண்டும் என ஆசைப்பட்டேன், விழாவிற்கு மெருகூட்டுகின்ற வகையில் கலைஞர் அவர்களையும் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.
அண்ணா வருவதற்கு வழக்கம்போல் காலதாமதம் ஆகிவிட்டது. வேறு வழியின்றி, சி.பி. சிற்றரசு தலைமையில் என் திருமணம் நடைபெற்றது. மதியம் ஒரு மணி ஆகியும் அண்ணா, கலைஞர் இருவரும் வரவில்லை. மிகவும் வேதனையுற்றேன்.
அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

சாப்பாட்டுப் பந்தியில் உட்கார்ந்திருந்த  போது சேதி ஒன்று வந்து சேர்ந்தது அண்ணாவும் கலைஞரும் வந்து விட்டார்கள்!.
நான் எவ்வளவு வேதனையில் இருக்கிறேன் என்பதை உணர்ந்த அண்ணா, என்னைத் தனியாக  ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று ’என்னிடம் கோபப்படாதே. நான் வந்த  கார் கருணாநிதியினுடையது. திருநெல்வேலி  வந்தவுடன் காரோட்டிக்குக் கடுமையான தூக்கம்.  அவன் தூங்கி விட்டான். எவ்வளவோ சிரமப்பட்டு அவனை எழுப்ப முயன்றோம், அவன்  விழிக்கவில்லை. நான் என்ன செய்வேன்?” என்றார்.
‘’பரவாயில்லை, இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தீர்களே அதுவே,போதும்’’ என்றேன்.
கொஞ்சநேரம் கழித்து, கலைஞர் என்னை வெளியே அழைத்துச் சென்று, ’’என்னிடம் கோபப்படாதீகள். திருநெல்வேலி வந்தவுடன் “கொஞ்ச நேரத்திற்குத் தூங்க வேண்டும்’’ என்றார் அண்ணா. களைப்பு காரணமாக அதிக நேரம் தூங்கிவிட்டார்.  அவரை யார் எழுப்புவது? இதுதான் நடந்த நிகழ்ச்சி! என்றார்.
கி..ஆ.பெ.விசுவநாதம் ‘என் நண்பர்கள்’ நூலில் அறிஞர் அண்ணா பற்றி சொல்கிறார்:
கி.ஆ.பெ. விசுவநாதம்
கி.ஆ.பெ. விசுவநாதம்

“அன்பர் அண்ணாதுரையிடம் ஒரு குறை கண்டேன். அதுதான் பொய் சொல்வது. ஒருநாள்  நானும் அண்ணாவும் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு  ஒரு  அன்பர் வந்தார். ‘9-ஆம் தேதி கூட்டம்,. தங்கள் வரவேண்டும்‘ என்றார்.ஒப்பினேன். அன்பர் அங்கிருந்த அண்ணாவையும் அழைத்தார். அவரும் ஒப்பினார்.  வந்தவர் மகிழ்ச்சியோடு சென்றார். 9- ஆம் தேதி வேறு வேலை இருப்பதாகச் சொன்னீர்களே….. எப்படி ஒப்பினீர்கள்?; என்றேன்.
‘’நான் போகப் போவதில்லை.. சும்மா சொன்னேன்’’ என்றார்.
‘’இந்த உண்மையை அவரிடம் சொல்லி இருக்கலாமே?‘ ’என்றேன். ‘’சொன்னால் அவர் நம்மை விட்டுப் போயிருக்க மாட்டார். நாமும் பேசிக் கொண்டிருக்க முடியாது! ‘’என்றார்.
‘ இதற்காகப் பொய் சொல்வானேன்?’’ என்றேன்.
‘’உண்மையை ஒப்புக் கொள்கிற குணம் உண்டாகிற வரையில் பொய் சொல்வதில் தவறொன்றுமில்லை! ‘’என்றார்.அண்ணா.”
பொய்மையும் வாய்மையிடத்து!
(இன்னும் வேறு பல பிரபலங்கள் பற்றி, நீங்கள் அறியாத பல சங்கதிகளோடு இரண்டாம் பகுதி, வரும் வியாழன் 6.10.2016 அன்று வெளியாகும்.)