சென்னை: அரசியல் கட்சிகள் கிராம சபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுவதாக தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. கிராமசபை கூட்டங்கள் அரசியல் அரங்கங்களாக மாறி வருவதால், அதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 994ன்படி, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், 18 வயது நிரம்பிய ஓட்டளிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கி, கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது.கிராம சபை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் நிர்வாக அமைப்பு. கிராம சபைகள், அந்த ஊராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவை.
கிராம சபைகள் செயல்படும் முறைகள் குறித்த, விரிவான விதிமுறைகள், அரசால் வெளியிடப் பட்டு உள்ளன. ஆண்டுதோறும், குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி நாட்களில் நடத்த, அரசு வழிமுறைகளை வெளியிட்டு உள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில், முக்கிய பங்காற்றும் கிராம சபைகள், அரசியல் சார்பற்றவை.
இந்நிலையில், சில அரசியல் கட்சிகள், கிராம சபை என்ற பெயரில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன், மக்களை குழப்புவதற்காக, அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.இது, ஊராட்சிகள் சட்ட விதிமுறைகளுக்கு முரணானது மட்டும் அல்லாமல், அந்த அமைப்பை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கிராம சபையை கூட்டும் அதிகாரம், ஊராட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது. அவர், கிராம சபையை கூட்ட தவறினால், ஊராட்சிகளின் ஆய்வாளர், மாவட்ட கலெக்டர், கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும்.இவர்கள் தவிர, கிராம சபை கூட்டம் என்ற பெயரில், தனி நபர்களோ, அரசியல் கட்சிகளோ, கூட்டங்களை கூட்டுவது, சட்டத்திற்கு எதிரானது. எனவே, இந்த சட்டத்தை மீறுவோர் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளன.
அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக, கிராம சபை என்ற பெயரில், அரசியல் கட்சிகள் அல்லது தனி நபர்கள் கூட்டங்களை நடத்துவது, பொதுமக்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாகும். எனவே, இத்தகைய நடவடிக்கைகளை, மாவட்ட கலெக்டர்கள் அனுமதிக்கக் கூடாது. கிராம சபை கூட்டம் நடத்த, அரசால் அனுமதிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள், கிராம சபை என்ற பெயரை, தவறாக பயன்படுத்தி, அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.