ராஞ்சி
நேற்றைய இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் இரு அரசியல் எதிரிகள் ஒன்றாக பிரசாரம் செய்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான சிபு சோரன் அம்மாநிலத்தின் தன்னிகரற்ற தலைவர் ஆவார். அவர் தொடர்ந்து தும்கா மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று வந்தார். அம்மாநிலத்தின் மற்றொரு தலைவரான பாபுலால் மராண்டி தற்போது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதாந்திரிக்) கட்சியின் தலைவராக உள்ளார். இவர் சிபு சோரனை 1998 ஆம் வருடம் மக்களவை தேர்தலில் தோற்கடித்தார்.
அதில் இருந்து இரு தலைவர்களுக்கும் அரசியலில் கடும் பகை ஏற்பட்டது. அப்போது பாபுலால் மராண்டி பாஜகவில் இருந்தார். அதன் பிறகு சிபு சோரனின் மனைவி ரூபி சோரனை பாபுலால் கடந்த 2000 மற்றும் 2006 ஆம் வருடம் நடந்த தேர்தலில் தோற்கடித்தார். அதன் பிறகு சிபு சோரன் மற்றும் பாபுலால் ஆகிய இருவரும் அரசியல் உலகில் பரம எதிரிகள் என அழைக்கப்பட்டனர். கடந்த 2016 ஆம் வருடம் பாபுலால் தனது கட்சியான ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவை தொடங்கினார்.
தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் 4 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அவை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ஜார்காண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகியவை ஆகும். நேற்று மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் நடந்தது. இதில் பாபுலால் தனது அரசியல் எதிரியான சிபு சோரனை ஆதரித்து பிரசாரக் கூட்டத்தி வாக்கு சேகரித்துள்ளார்.
பாபுலால் மராண்டி தனது பிரசாரத்தில், “இதற்கு முன்பு நாங்கள் இருவரும் சண்டை இட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை தோற்கடிக்க இருவரும் இணைந்துள்ளோம். கடந்த 2014 ஆம் வருட தேர்தலில் எனக்கு நீங்கள் 1.58 லட்சம் வாக்களித்து வெற்றி பெற வைத்தீர்கள். இம்முறை குருஜி (சிபு சோரன்)க்கு அதை விட அதிக வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” என கூறி உள்ளார்.