டெல்லி:

வெளிப்படையான செயல்பாட்டை கொண்டு வரும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக சீரமைப்புகளுக்கான சங்கம் சார்பில் நடந்த தேர்தல் மற்றும் சீரமைப்பு தொடர்பான 13வது தேசிய மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் மனிஷ் திவாரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அரசியல் செயல்பாட்டிற்கு கார்பரேட் நிறுவனங்கள் நிதியளிப்பதை நிறுத்த வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும் நிதிகளுக்கு முகவரி இருக்க வேண்டும்” என்றார்.

மேலும், அவர் பேசுகையில், “அதனால் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடையை ஆதாருடன் இணைக்க வேண்டும். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, ரூ. 5 லட்சமாக இருந்தாலும் சரி. ஆதார் இணைப்பு இருந்தால் நன்கொடைக்கான ஆதாரத்தை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

அரசியல் கட்சிகளுக்கான தனி நபர் நன்கொடையை ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 ஆயிரமாக குறைத்ததன் மூலம் எவ்வித பயனும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. கூப்பன்களின் எண்ணிக்கை தான் அதிகரிக்கும். இதனால் பிரின்டிங் செலவு தான் அதிகரிக்கும். கார்பரேட் நிறுவனங்களிடம் ஆதார் அட்டை கிடையாது” என்றார்.

தொடர்ந்து திவாரி பேசுகையில், “நீண்ட நாட்களாக தேர்தல்களுக்கு கார்பரேட் நிறுவனங்கள் நன்கொடை அளித்து வருகின்றன. தேர்தலில் தனியார் நிதி பங்களிப்பு இல்லை என்பதை எப்படி உறுதி செய்வது. பங்குதாரர்களுக்கு லாபம் ஈட்டும் தொழிலில் கார்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

அவர்கள் அரசியல் நடைமுறைக்கு நிதியுதவி அளிக்ககூடாது. அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டால் தான் நன்கொடையிலும் வெளிப்படைத்தன்மை இருக்கும்” என்றார்.