சென்னை: மதுவுக்கு எதிராக நடைபெற உள்ள விசிக மாநாட்டில் கலந்துகொள்ளும்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு,  திமுக கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலுக்குள் கால் வைத்துள்ளது, திராவிட கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது திடீரென திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான விசிக, அதிமுவுக்கு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சமார் 63 பேர் உயிரிழந்த நிலையில், பலரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் திமுகஅரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.  அரசே மது விற்பனை  செய்வதை நிறுத்த வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் உள்பட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில்  மது ஒழிப்பு மாநலாடு நடைபெற உள்ளது. வி.சி.க. மகளிரணி சார்பில் வரும் 2ம் தேதி  நடைபெறும் இந்த  மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளதுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக சென்னையில் நிருபர்களைச் சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், வி.சி.க. நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம்.

மக்கள் பிரச்சினைகளுக்காக போராடும் எந்த சக்தியுடனும் விசிக இணையும் என்றவர்,   மதுக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் கூறினார்

மேலும்,  “மக்கள் பிரச்சினைகளுக்காக மதவாத, சாதிய சக்திகள் தவிர மற்ற எந்த சக்திகளுடனும் இணைவோம். மக்கள் பிரச்சினைகளுக்காக ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மாநாடு நடத்த விருப்பம்.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வர வேண்டும். குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, மறுவாழ்வு அளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

மது ஒழிப்பு மாநாட்டிற்கு எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடில் உள்ள கட்சிகள் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது. இது அரசியல் அல்ல. அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டும்.

சாதிய போதை மதுபோதையை விட மோசமானது. மத போதை போதைப்பொருளை விட மோசமானது. தேர்தல் நிலைப்பாடு என்பது வேறு. தேர்தல் அரசியல் என்பது வேறு. அ.தி.மு.க.வே இதைப்பற்றி சொல்கிறார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.