சென்னை:
மிழக அரசு அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மாநிலம் முழுவதிலும் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், பள்ளிகள், தனியார் மருத்துவமனை என 43,051 போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாளை நடைபெறவிருக்கிறது. நாளை ஒரு நாளில் அனைத்து மையங்களிலும் சேர்த்து 70.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் இயங்கும் இந்த முகாம்களில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். ஓரிரு நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தாலும் மீண்டும் போடப்படும். போலியோ சொட்டு மருந்து போடாத குழந்தைகளை கண்டறிய சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

சொட்டு மருந்து மையங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். காய்ச்சல் ஏதேனும் இருந்தால் சொட்டு மருந்து முகாமுக்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சொட்டு மருந்து போடும் குழந்தையுடன் ஒரு நபரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்த 3 ஆயிரம் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். இந்த நடமாடும் குழுக்கள் மூலமாக மக்கள் எளிதில் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம்

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.