சென்னை:

நாளை (ஜனவரி 19ந்தேதி) தமிழகம் முழுவதும் போலி சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இளம் தாய்மார்கள்  தங்களது 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ  சொட்டு மருந்து கொடுப்பதை மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளும்படி, பத்திரிகை டாட் காம் இணைய தளமும் (www.patrikai.com) வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழகத்தில் ehis போலியோ சொட்டு மருந்து முகாம்  நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 43ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படுவதாகவும், சுமார்   71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துவழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நாடுமுழுவதும் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் போலியோ நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், கடந்த ஆண்டு முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒருமுறை மட்டுமே  வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நாளை நாடு  முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், அரசு பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட முக்கியமான இடங்கள் உள்பட 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடமாடும் வாகன வசதி மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு  உள்ளது.

இந்த  போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர். போலியோ நோய் தாக்குதலில் இருந்து தங்களது குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள இளம் தாய்மார்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்…