அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஊகங்களின் அடிப்படையில் செய்தி வெளியிடுவதை தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி வருகின்றன
குறிப்பாக, ‘எதிரி ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்’ ‘திருப்பூரை சேர்ந்த ஒரு நபர் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்’ என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன
மேலும், பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை எதிரியிடமிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழு பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறி வருகின்றன.
இதையடுத்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவையாகும்
இவ்வழக்குகளின் தீவிரதன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஊடகங்கள், தனி நபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது