மும்பை

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா தொடுத்த பாலியல் குற்றச்சாட்டை காவல்துறையினர் ரத்து செய்ய உள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் தமிழ் பட உலக ரசிகர்களுக்கும் பொம்மலாட்டம்,  காலா போன்ற படங்கள் மூலம் அறிமுகமானவர் ஆவார்.   இவர் மீது பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை #மீடூ மூலம் அளித்தார்.  இது திரை உலகை பரபரப்பில் ஆழ்த்தியது.

நானா படேகருடன் ஒரு இந்திப் படத்தில் நடனக் காட்சியில் நடித்த போது தனுஸ்ரீ தத்தாவிடம் நானா படேகர் வரம்பு மீறி நடந்துக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார்.    அதற்கு நடன இயக்குனரும் உடந்தை எனவும் அவர் தனது குற்றச்சாட்டில் கூறி இருந்தார்.

இதை ஒட்டி மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.   அந்த விசாரணையில் தனுஸ்ரீ தத்தாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனவும் நானா படேகரை பழிவாங்க இவ்வாறு போலி குற்றச்சாட்டு அளித்ததகவும் தெரிய வந்துள்ளது.  அதனால் மும்பை போலிசார் இந்த குற்றச்சாட்டை ரத்து செய்ய தீர்மானித்துள்ளனர்.

குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி நீதிபதியின் உத்தரவுக்காக மனு செய்யப்பட்டுள்ளது    இது குறித்து தனுஸ்ரீ தத்தா, “எனது தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   இந்தியாவில் பெண்கள் நிலை இவ்வளவுதான் என்பதால் நான் இதற்காக வியப்படையவில்லை” என தெரிவித்துள்ளார்.