மேற்கு வங்க மாநிலம் பிர்ஹம் மாவட்டத்தில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இந்த லாரியில் 50 கிலோ மூட்டைகளாக 320 மூட்டைகளில் மொத்தம் 16000 கிலோ அம்மோனியம் நைட்ரைட் வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அந்த லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு ராம்புரத் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தியோகர் சென்ற இந்த லாரியில் அம்மோனியம் நைட்ரைட் ஏற்றிச் செல்வதற்கான முறையான ஆவணம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம், மேற்கு வங்க காவல்துறையினர் ராம்புரத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இருந்து 20,000 டெட்டனேட்டர்கள் மற்றும் 15,000 ஜெலட்டின் குச்சிகளை மீட்டனர்.

இந்த நிலையில் தற்போது அளவுக்கு அதிகமாக அம்மோனியம் நைட்ரைட் எடுத்துச் செல்லப்பட்டது காவல்துறையினரை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் பகுதியில் கல்குவாரிகள் அதிகம் இருக்கும் நிலையில் இந்த வெடிபொருட்கள் குவாரிகள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறதா அல்லது நாசவேலையில் ஈடுபடும் நக்ஸலைட்டுகளுக்கு செல்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.