திருநெல்வேலி

நெல்லையில் ஆட்சியாளர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்புக்கு கடன் பிரச்னையே காரணம் என போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருநெல்வேலி ஆட்சியாளர் அலுவலகத்தில் நேற்று காலை காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த இசக்கிமுத்து, அவர் மனைவி சுப்புலட்சுமி ஆகிய இருவரும் தங்கள் குழந்தைகள் சரண்யா மற்றும் அட்சய பரணி ஆகியோரை மண்ணெணெய் ஊற்றி நெருப்பு வைத்ததுடன் தாங்களும் பற்ற வைத்துக் கொண்டனர்.   நால்வரையும் காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு  சுப்புலட்சுமியும் குழந்தைகளும் மரணம் அடைந்தனர்.  இசக்கிமுத்து அபாய நிலையில் உள்ளார்.

இந்த தீக்குளிப்புக்கு கந்துவட்டிக் கொடுமைதான் காரணம் என தகவல்கள் வந்துள்ள நிலையில் ஏற்கனவே இது குறித்து இசக்கி முத்து அளித்த நான்கு புகார் மனுக்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தகவல் வந்தது.   இதையொட்டி பலரும் அரசின் மீது குற்றம் சாட்டத் துவங்கினர்.   செய்தி ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் இதை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் அரசு தரப்பில் இருந்து பத்திரிக்கை செய்தி என்னும் தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.   அந்த அறிக்கையில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் “விசாரணையில் மேற்படி இசக்கிமுத்துவும், அவரது மனைவி சுப்புலட்சுமியும் அதே காசி தர்மம் கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.2,05,000/- கடனாக பெற்றதுடன் அவரது நகைகளையும் வாங்கி வங்கியில் அடமானம் வைத்து பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் பின்னர் மேற்படி முத்துலட்சுமி, சுப்புலட்சுமி மற்றும் அவரது கணவரிடம் பணத்தையும் நகையையும் கேட்ட போது அவர்கள் மறுத்துள்ளனர்.  எனவே இது தொடர்பாக மேற்படி முத்துலட்சுமி, அச்சன் புதூர் காவல் நிலையத்திலும் பின்னர் மாவட்ட காவல் அலுவலகத்திலும்  மனு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் மேற்படி சுப்புலட்சுமி, தன்னிடம் முத்துலட்சுமி கந்து வட்டி வசூலிப்பதாக ஆட்சியாளரிடம் 4 புகார் மனுக்கள் கொடுத்துள்ளார். மேற்படி 4  மனுக்களும் விசாரணைக்காக அச்சன்புதூர் காவல் நிலையத்துக்கு  அனுப்பப்பட்டுள்ளது.  ஆனால் பதிவுத் தபாலில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு சுப்புலட்சுமியும் அவர் கணவர் இசக்கி முத்துவும் வரவில்லை.  மேலும் விசாரணையில் அவர்கள் அந்த கிராமத்தில் 4 மாதங்களாக குடியிருக்கவில்லை என காசிதர்மம் VAO சாட்சி அளித்துள்ளார்,   அதனால் எதிர்மனுதாரர் முத்துலட்சுமியை மட்டுமே விசாரிக்க முடிந்தது.

இந்நிலையில் மேற்படி இருவரும் தங்கள் குழந்தகளுடன் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தங்கள் குழந்தகள் மீதும்,  தங்கள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு பற்ற வைத்துக்கொண்டனர்.   இது தொடர்பாக இசக்கிமுத்துவின் தம்பி கோபி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாளையம்கோட்டை காவல் ஆய்வாளர் திரு பெரியசாமி முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் தளவாய் ராஜ் ஆகியோரை விசாரித்து வருகிறார்.  மேற்படி மனு விசாரணை சம்பந்தமாக விரிவான விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில், மற்றும் வழக்கின் விசாரணை அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.