சென்னை; மதுரை ஆதீனத்தின் மீது அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது”  என சென்னை  உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஆட்சியை குறை குற்றம் சொல்லும் எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்வதுடன், அவர்களை நள்ளிரவே சென்று காவல்துறையினர் மூலம்அதிரடியாக கைது செய்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. அதுபோல அரசின் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சிலர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மதுரை ஆதீனம் மீதான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி,   “மதுரை ஆதீனத்தின் மீது அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது”  என காவல்துறையை கடுமையாக சாடியுள்ளது.

முன்னதாக,  மதுரை ஆதீனம் திருச்சி நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தன்னை திட்டமிட்டு கொலை செய்யச் சிலர் எச்சரித்து இருப்பதாகவும், குல்லா அணிந்த நபர்கள் தன்னை கொலை செய்வதற்கு முற்பட்டு தன்னை தாக்க முற்பட்டதாகவும்  சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டபோது  கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த பேச்சு குறித்து, இந்த சம்பவத்துக்கு சம்பந்தம் இல்லாத,  சென்னை அயனாபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இந்த வழக்கானது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த புகாரின் பேரில் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இரு வேறு சமூகத்திற்கிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்படுதல், பொதுத் தூய்மைக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் அமர்வில்  நேற்று மீண்டும்  (15.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில், “மதுரை ஆதீனம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் விதத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது. மேலும்,  காவல் துறை விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆதீனம் முரணாக பதிலளித்ததாகவும், விசாரணைக்கு  மதுரை ஆதீனம் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை ஆதீனம் தரப்பில் வாதிடுகையில், “காவல்துறை விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். காவல்துறை யினர் சிலர் சீருடை இல்லாமல் விசாரணைக்கு வருகின்றனர்”, அவர்களிடம் எப்படி விளக்கம் அளிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பும் மாறி மாறி குறை கூறினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அப்படியே முடிந்திருக்கும்.நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கக்கூடிய சூழலில், காவல்துறையினர்  தேவையற்ற இந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துடன் வழக்காக பதிவு செய்து பெரிதுபடுத்தி இருப்பதாக குற்றம் சாட்டினார்.  மேலும்,  இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அதோடு இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

அதுவரை மதுரை ஆதீனத்துக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.