சென்னை

நேற்று இரவு முதல் அதிமுக  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டு முன்பு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் தேதி அன்னூரில் அத்திக்கடவு – அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது.  தமிழக முதல்வராக பழனிசாமி இருந்தபோது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக நடந்த இந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான கே.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூ ராஜு,

“அ.தி.மு.க., கட்சியையோ, பொது செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்பாளரிடம் தான் சொல்லியுள்ளார். இதனால் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று செங்கோட்டையனே சொல்லிவிட்டார் இதற்கு பின் இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது

என்று தெரிவித்தார்.

நேற்று  இரவு 7 மணியளவில் ஒரு ஆய்வாளர் மற்றும் 3 போலீசார் அடங்கிய குழுவினர், குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டுக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவினரிடையே  இது குறித்துவிசாரித்தபோது,’தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று செங்கோட்டையன் காவல் துறையிடம் கோரவில்லை எனவும் உயர் அதிகாரிகள் திடீர் உத்தரவின் பேரில் அவர்களாகவே பாதுகாப்பு பணியில் ஈடுபட வீட்டுக்கு வந்துள்ளனர்’என்றும் தெரிவித்துள்ளனர்.