டெல்லி:
டில்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில், போலீசாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இன்று காவலர்கள், காவல்துறை அலுவலகம் முன் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் எதிர்ப்பை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் காவலர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
டெல்லி, தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், கடந்த 2ந்தேதி போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது வன்முறையாக மாறியதில், 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் காயம்அடைந்தனர். போலீஸ் வாகனம், தீ வைத்து எரிக்கப்பட்டது; மொத்தம் 17 வாகனங்கள் சேதமடைந்தன.
மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிறப்பு ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பாளர்) சஞ்சய் சிங் நேற்று நீக்கப்பட்டார் மற்றும் சிறப்பு ஆணையர் ஆர்.எஸ். கிருஷ்ணையாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டில்லியில் அமைந்துள்ள, தீஸ் ஹசாரி, கார்கர்டோமா, சாகேத், துவாரகா, ரோஹினி, பட்டியாலா ஹவுஸ் ஆகிய ஆறு மாவட்ட நீதிமன்றங்களிலும், வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிப்பு செய்தனர்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த போலீஸ் அதிகாரியை கடுமையாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று காவல்துறையினர், தங்களுக்கு நீதிவேண்டும் என்று கூறி, காவல்துறை தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள கோரிக்கை மீது உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுத்து வருவதாகவும் காவலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
டெல்லி காவல்துறை வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதையும், மூத்த காவல்துறை அதிகாரிகளின் திறமையற்ற தன்மையையும் கேள்வி எழுப்பி, பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே காவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.