நைனிடால்
இஸ்லாமிய இளைஞர் ஒருவரைக் கொல்ல வந்த இந்துத்வா கும்பலிடம் இருந்து ஒரு காவல்துறை அதிகாரி காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தூத்துக்குடியில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை ஒட்டி இணையத்தில் பலரும் காவல்துறையினரை பற்றி கண்டனப் பதிவுகள் இட்டு வருகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள நைனிடால் மாவட்டத்தில் கொலைத் தாக்குதலில் இருந்து ஒரு இஸ்லாமிய இளைஞரைக் காத்த காவல்துறை அதிகாரி குறித்த வீடியோவை \ இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
நைனிடால் பகுதியைச் சேர்ந்த துணை ஆய்வாளர் சீக்கியரான ககன்தீப் சிங். நைனிடால் அருகில் உள்ள ஒரு கோவிலில் ஒரு இஸ்லாமிய இளைஞர் தனது இந்துக் காதலியை சந்திக்க வந்துள்ளார். அவர்கள் இருவரையும் அங்குள்ள இந்துத்வா அமைப்பினர் சந்தேகத்தில் பிடித்து கேள்விகள் கேட்டுள்ளனர். அந்த இளைஞர் இஸ்லாமியர் என்பதால் அந்த இந்துத்வா கும்பல் அவரைத் தாக்கத் தொடங்கி உள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=4FZBwk_DnzQ]
அப்போது அங்கிருந்த ககன்தீப் சிங் இடையில் புகுந்து அந்த இளைஞரை காப்பாற்றி உள்ளார். இந்த நிகழ்வு வீடியோ பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பரவி வைரலாகியது. இந்த தகவலை உள்ளூர் ஆய்வாளர் விக்ரம் ராதோட் உறுதி செய்துள்ளார். அந்தப் பெண்ணையும் அவர்கள் பெற்றோரையும் அழைத்துள்ளனர். அதே போல் அந்த இளைஞரையும் அவர்கள் பெற்றோரையும் அழைத்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர்.