ஐதராபாத்தில் பாலுக்காக அழுத 2மாத குழந்தைக்கு பாலுட்டிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மதுபோதையில் இருந்த தாய் தன் கைக்குழந்தையை வேறொரு நபரிடம் கொடுத்து விட்டு சென்றதாக காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஐதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா மருத்துவமனை அருகே இரண்டுமாத கைக்குழந்தை ஒன்றை அதன் தாயார் சபானா பேகம், இர்ஃபான் என்பரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த அந்த தாய் தான் தண்ணீர் குடித்துவிட்டு வரும் வரை குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு அந்த நபரிடம் சபானா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் சபானா நீண்ட நேரமாகியும் வராததால், அந்த நபர் குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்றார். அந்த குழந்தை பசியால் அழுததால் எவ்வளவு முயன்றும் அந்த நபரால் சமாதானம் செய்ய முடியவில்லை. குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கவும் அந்த நபர் முயன்றதும் தோல்வியில் முடிவடைந்தது.
தொடர்ந்து குழந்தை பசியால் அழுகவே இர்ஃபான் அஃப்ஸால்கஞ்ச் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றார். அதை தொடர்ந்து ஆதரவற்ற குழந்தை பாலுக்காக அழுகின்ற தகவல் பெண் காவலர் பிரியங்காவிடம் தெரிவிக்கப்பட்டது. பிரியங்கா பேகம்பேட் மகளிர் காவல்நிலையத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு கைக்குழந்தைக்கு தாயாவார். பணியில் இருந்தபடியே தனது குழந்தையையும் காவல்நிலையத்திலேயே பிரியங்கா கவனித்து வந்துள்ளார்.
குழந்தை பாலுக்காக அழும் தகவலை அறிந்ததும் அஃப்ஸால்கஞ்ச் காவல்நிலையத்திற்கு வந்த பிரியங்கா, குழந்தைக்கு பாலூட்டினார். அதன்பின்னர் குழந்தையின் அழுகை நின்றது. போதை தெளிந்ததும் தாய் சபானா குழந்தையை தேடி வந்துள்ளார். அவரிடம் உரிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு குழந்தை பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் பசியால் அழுத குழந்தைக்கு பால் கொடுத்த பெண் காவலர் பிரியங்கா பாராட்டுகள் குவிந்து வருகின்றன.