குர்கான்:

டில்லி ரியான் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

டில்லி அருகே குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் படித்த பிரதுமான் தாகூர் என்ற 2ம் வகுப்பு மாணவனை பாலியல் முயற்சி செய்த பஸ் கண்டக்டர் அசோக்குமார் சிறுவனின கழுத்தை அறுத்து கொலை செய்தான். பள்ளியின் கழிப்பிடத்தில் இருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

இப்பள்ளி பாஜகவுக்கு ஆதரவாக உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனால் போலீசார் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை.

சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என சிறுவனின் பெற்றோரும், அங்கு படிக்கும் மாணவர்களின் உறவினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பெற்றோருக்கு போலீசார் விசாரணை திருப்தியில்லாத பட்சத்தில் சி.பி.ஐ. உட்பட எந்த அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட தயாராக உள்ளதாக மாநில அரசு உறுதியளித்துள்ளது.

இதனை வலியுறுத்தி இன்று காலை பெற்றோர்கள் பள்ளி வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். பிரதுமான் தாகூர் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பள்ளிக்கு அருகேயிருந்த மதுபான கடைக்கு தீவைக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.