திருப்பூரில் தொழில் அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் வீரபாண்டி குப்பாண்டாம் பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி பிரபாகரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் தங்க, வைர நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்றனர். அங்கு பதிவாகி இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தனர். பனியன் கம்பெனி அதிபர் பிரபாகரன் வசிக்கும் வீடு அடுக்கு மாடி குடியிருப்பு ஆகும். அங்கு வெளி நபர்கள் எளிதில் நுழைய முடியாது. எனவே பிரபாகரன் ஊருக்கு செல்வதை அறிந்த அவருக்கு தெரிந்தவர்கள் யாராவது தான் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.