சென்னை: விஜய் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்துக்கு போலீசார் கடும் கெடுபிடி விதித்துள்ளனர். அவர் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அவர் பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தின் வெளியே வரக்கூடாது உள்பட பல நிபந்தனைகளை விதித்துள்ளதால், தவெகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் காவல்துறையினரின் அனுமதியை மீறி பிரசாரத்தை நடத்த விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் நீதிமன்றத்தை நாடகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காவல்துறை அலுவலகத்தில் தவெகவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருப்பதாக அறிவித்து உள்ளார். அவரது முதல் பிரசார பயணம் திருச்சியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதற்கான அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு, வாகன நெரிசல் என பல காரணங்களை காட்டி ஏற்க காவல்துறை மறுத்து விட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் இரண்டு இடங்களை கேட்டு அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல்துறையும் அதையும் ஏற்க மறுத்து விட்டது. இதனால், தவெகவினர், காவல்துறையினரின் அனுமதியை மீறி கூட்டத்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி என பலரும், ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜயின் ரோடு ஷோ கூட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதுடன், மேலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, கடும் கெடுபிடி செய்துவருவது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 13-ந் தேதி முதல் தனது முதல் பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, தனது முதல் பிரசார ம் திருச்சி மாவட்டத்தில் இருந்து தொடங்க திட்டமிட்டிருந்தார். அதன்படி, 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் விஜய் முதலில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த 6-ந் தேதி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து சத்திரம் பஸ் நிலையம் அருகே உரையாற்ற அனுமதி அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.
ஆனால் போலீசார், பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி, ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி கொள்ளுமாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, த.வெ.க. திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு அளிக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் த.வெ.க.வினர் அனுமதி கேட்கும் கடிதத்துடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
மேலும் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரை சந்தித்து, பிரசார பயணத்திற்கு அனுமதி கடிதம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் நீண்ட நேரமாக த.வெ.க.வினர் கமிஷனர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் துணை கமிஷனரை சந்திக்க புறப்பட்டனர். அதன்படி அவர்கள் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் எஸ்.ஆர்.சி. கல்லூரி அருகில் உள்ள திருச்சி மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சிபினை சந்தித்து, விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்து பேசுவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து திருச்சி மரக்கடை பகுதியில் த.வெ.க. தலைவர் பிரசாரம் செய்வது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய் சுற்றுப்பயணத்திற்காக போலீசார் விதித்த நிபந்தனைகள் ஏற்க முடியாதது என த.வெ.க.வினர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் வாகனத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், வாகனத்தின் பின்னால் அதிக அளவில் வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விஜய் பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தின் வெளியே வரக்கூடாது எனவும் போலீசார் நிபந்தனை விதித்தனர். காவல்துறையின் குறிப்பிட்ட நிபந்தனைகளை ஏற்க த.வெ.க.வினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோவின்போது, அப்பாவி பள்ளி குழந்தைகளை வெயிலில் நிற்க வைத்து பூக்களை தூவி வரவேற்பு கொடுக்கும்போது, அவரை தொடர்ந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரும்போதும், அதனால் பொதுமக்கள் அவதி, வாகன நெரிசல் ஏற்படுவது தெரியவில்லை என கேள்வி எழுப்பி உள்ளதுடன், விஜயின் வரவை கண்டு திமுக மிரண்டுபோய் உள்ளது, அதனால்தான் காவல்துறை மூலம் பல்வேறு கெடுபிடிகளை செய்துவதாக கூறுவதுடன், காவல்துறையின் கெடுபிடியை மீறி தங்களது பிரசார பயணம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மீண்டும் காவல் துணை கமிஷனர் அலுலவகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதற்கிடையில், வாரம் ஒரு நாள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யும் வகையில் அவரது பிரசார உத்திகளும் மாற்றப்பட்டுள்ளத. வரும் 13ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை வாரம் ஒரு முறை சனிக்கிழமை மக்களை சந்திக்கிறார். அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மட்டும் சனி, ஞாயிற்றுக்கிழமை மக்களை சந்திக்கிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் குறைந்த பட்சமாக ஒரு மாவட்டம் அதிகபட்சமாக 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
