கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பிரபல ரவுடியின் கழுத்தை அறுத்து கொலைசெய்த கொலையாளி கிருஷ்ணாவை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளினர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி வீரா. இவர்மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது, அங்கு திடீரென வந்த ஒரு கும்பல் வீரை சுற்றி வளைத்துள்ளது சரமாரியாக வெட்டி வீசியது. அதில் ஒருவன், வீராவின் கழுத்தை அறுத்து தலையை தனியாக எடுத்துச் சென்றுள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சம்பவ இடத்தில் கழுத்து இல்லாமல் முண்டமாக கிடந்த வீராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து, வீராவின் தலையை தேடும் பணி நடைபெற்றது. மேலும், கொலையை செய்தது யார், அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தனிப்படைகளை அமைத்து போலீசார் வலைவீசி வந்தனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை மலட்டாறு பகுதியில் ஒரு கும்பல் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர், அங்கு பதுங்கியிருந்த 7 பேர சுற்றி வளைத்தனர். அப்போது, அந்த கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிஓட முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுத்தள்ளினர். மற்றவர்களையும் கைது செய்தனர்.
இதுகுறித்து கூறிய காவல்துறையினர், வீரா கிருஷ்ணா இடையே முன்பகை இருந்தாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.