சென்னை: தமிழ்நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து, பாஜக மகளிர் அணியினர் நடத்தவிருந்த மதுரை சென்னை நீதி கேட்பு பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறைஅனுமதி மறுத்துள்ளது. மேலும், அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், பாஜக மகளிர்அணியின் நீதி பேரணியில் கலந்துகொள்ள வருமாறு பாக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதாக கூறியும் தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாபாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெற உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
இந்த பேரணியானது நாளை தொடங்கி சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக கவர்னரை சந்தித்து, பாஜ.க. மகளிர் அணி சார்பில் கோரிக்கை மனு வழங்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பா.ஜ.க.வின் நீதி பேரணிக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மகளிர் அணியின் நீதிப் பேரணியில் கலந்துகொள்ள வருமாறு பொதுமக்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் திமுகவினராக இருப்பதால், பெரும்பாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி, குற்றத்தை மூடி மறைக்க முயல்கிறது திமுக தரப்பு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கிலும், கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகியுடன், கைப்பேசியில் பேசிய நபர் யார் என்ற உண்மையை முழுவதுமாக மறைக்க முயற்சிக்கிறது. இன்னும் ஒரு படி மேல் சென்று, பாதிக்கப்பட்ட மாணவியை, பொதுவெளியிலும், மாமன்றத்திலும் அவமானப்படுத்தியும், மாணவி குறித்த தனிப்பட்ட விவரங்களைக் கசிய விட்டு, இனி யாரும் குற்றவாளிகள் மீது புகார் கொடுக்க அச்சப்படும் அளவிற்கு மறைமுகமாக மிரட்டியும், தரம் தாழ்ந்தும் சென்று கொண்டிருக்கிறது திமுக அரசு.
திமுக அரசின் இந்தப் பெண்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட வழக்கில், முழு உண்மையும் வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜக மகளிர் அணி சார்பில், நாளை 03.01.2025 அன்று மதுரையில் தொடங்கி, சென்னை வரை நடைபெறவிருக்கும் நீதி கேட்பு பேரணியில் பெருவாரியான அளவில் சகோதரிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக நடத்த இருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.