தன்னம்பிக்கைக் கவிதை – பகுதி 4
முயற்சிப்போம் முன்னேறுவோம்
பா. தேவிமயில் குமார்
எந்த உயரத்தையும்
எட்டிடலாம்….. நீ
எண்ணம் கொண்டால் தான்
அதுவும் கைகூடும் !
கடைக்கோடி மனிதர்களும்
கோடிகளில் புரளும்,
கதை கேட்டதுண்டா ?
அரச வம்சத்தவரே ஆனாலும்
சிரம் தாழ்ந்து நின்ற வரலாறு
படித்ததுண்டா ?
வளைந்து செல்வது தான்
வழியா ? என
வாக்குவாதம் செய்வதில்லை
எந்த ஆறும் !
அடிப்பது வலிக்கிறதென எந்த
இசைக்கருவியும் அழுவதில்லை !
சிறகை விரித்துப் பறப்பது
சிரமமென்று எந்தப் பறவையும்
சலித்துக் கொள்வதில்லை !
ஓடிக்கொண்டே இருக்கின்றன
ஓய்வெடுப்பதில்லை கோள்கள் !
கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டோ
கவலைப் பட்டுக்கொண்டோ
எந்தத் தேனீயும் உழைப்பதில்லை !
மடுக்கள் என்றும், எந்த
மலைகளைப் பார்த்தும்
மலைத்துப் போவதில்லை !
போர்க்களம் சென்று தோற்க தேவையில்லை
சிலரின் பற்(களம்)கள் அந்த வேலையை
செய்துமுடித்துவிடும் நண்பா !
எனவே சிலர் சொல்லும்
சொற்களுக்கு செவிமடுக்காதே !
ஊருக்கு செல்லும் வழிதான்
உனக்கு சொல்லப்படும் !
வழித்துணைக்கு யாரையும்
எதிர் பார்க்காதே !
என்றாவது ஒருநாள் முயற்சிப்பது
சரி வராது !
என்றென்றும் முயற்சிப்பதே
சாதிப்பதற்கான வழி ஆகும் !
ஒவ்வொரு நாள் விடியலும்
உனக்கானது என எண்ணி,
உன் வேலைகளைத் தொடங்கு
வருத்தப்படும் போதெல்லாம்
உன் முன்னேற்றம் சற்று
நிறுத்தப்படுவதை நீ உணரவில்லையா ?
வாழ்ந்து பார்க்க
வழி தேடுவோருக்கே
வாசலைத் திறக்கிறது
வாய்ப்புகள் !
முடியும் என நினைப்பவர்க்கே
முன்னுரிமைத் தருகின்றன
முயற்சிகள் !
சாதிக்க நினைப்பவரை
மட்டுமே சந்திக்க
நினைக்கிறது சாதனைகள்
எனவே வாருங்கள் !
முயற்சிப்போம் ! முன்னேறுவோம் !