தன்னம்பிக்கைக் கவிதை – பகுதி 3
திட்டமிடல்
பா. தேவிமயில் குமார்
நான் அழகானவன் என
நாள் தோறும்
கண்ணாடி முன் நின்று
கண் சிமிட்டி சொல்லிடுங்கள் !
நான் வலிமையானவன் என்ற
நல்ல வார்த்தையை
நாளும், நாளும்,
நயம்பட உரைத்திடுங்கள் !
நான் திறமையானவன் என
தினம், தினம், ஏன்…..
திரும்ப, திரும்ப உரைத்திடுங்கள்
திருப்பம் கிடைத்திடும் ! நிச்சயமாக !
வாய்ப்புகளை நோக்கி
வாழ்க்கைப் பாதையை
வகுத்துக் கொள்ளுங்கள்,
வாழ்க்கை வசந்தமாகும் !
நம்பிக்கை யானது எங்கும்
நிறைந்துள்ளது, காற்றைப் போல,
வேண்டுமளவு மனதில்
நிறைத்துக்கொள், தடுப்பவர் யாருமில்லை !
சரியான திட்டமிடல் மட்டுமே
சாதிக்க நினைப்பவர்
வைத்திருக்கும் ஒரு
உறுதியான அஸ்திரமாகும் !
எறும்புகள் கூட கேட்பதில்லை
ஒய்வு நேரத்தை…… ஆனால் நீ ???
கடவுளே ஆனாலும், அவருக்கும்
கடந்த காலம் திரும்பக் கிடைக்காதே !
இரும்புக் கம்பிகள் என்றும்
ஈரத்தில் வளைந்திடாது,
எவருக்கும் வாழ்க்கையானது
எளிதாக இருந்திடாது !
உன் வாழ்க்கை ஒன்றும்
வாடகை வீடல்ல,
அடுத்தவர் வசித்திட,
அதை நீதான் வாழ வேண்டும்,
அதனை நீயே செப்பனிட வேண்டும் !
உன்,
குறைகளை சுட்டிக்காட்ட
கூட்டமே சேர்ந்திடும்,
ஆனால்…..
நிறைகளைப் பாராட்ட
நேரமிருக்காது அவர்களுக்கு !
ஒவ்வொரு மனிதரிடமும், ஏதோ
ஒரு அழகியல் இருக்கும்
அதனை எடுத்துக்கொள்,
அடுத்தவரின் குறைகளை
அவர்களிடமே விட்டுவிடு !
முன்னேற்றம் என்பது வெறும்
முயற்சியால் மட்டும் வருவதல்ல !
மனிதத்துவம் இருந்தால்
மட்டுமே அதுவும் கைக்கூடும் !
நீ கேட்பதையெல்லாம்
நிறைவாய்க் கொடுத்திட
பிரபஞ்சம் தயாராக உள்ளது,
பின் ஏன் இன்னும் உறக்கம் ?
எடுத்து வை உன் முதல் அடியை
எட்டிப் பிடிக்கலாம் அண்டத்தை !
வெற்றி உனதே ! வா ! சாதிக்கலாம் !