தன்னம்பிக்கைக் கவிதை – பகுதி 1
வைரமாகலாம்
பா. தேவிமயில் குமார்
◆ ஒவ்வொரு நொடியும்
யாரோ, எங்கோ,
சாதித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்
◆ காலம் உனக்காகக் காத்திருக்காது,
ஆனால்…….
கதைகள் உனக்காக வைத்திருக்கும்
அடுத்த சந்ததிகளுக்கு சொல்லிட !
◆ எழுந்தவுடன் அன்றைய தினத்துக்கான
எழுச்சி ஒப்பனைகளை தீட்டிக்கொள்
◆ சாதிக்க நினைக்கும்போது,
தினம் உன் நாள் காட்டி
திருவிழாக்களையேக் காண்பிக்கும் !
◆ ஆயத்தமாய், இரு, நம்பிக்கை
ஆயுதங்களை ஏந்திடும்
போர் வீரனாய் இரு !
◆ உன் பயணம் “எதுவென்று” உணர்ந்தால்
உன் பாதை “எதைவென்று” வரலாம் என
உனக்குக் காட்டிடும் !
◆ அப்புறம் பார்க்கலாம் என்ற
எண்ணத்தை உடனே
அப்புறப்படுத்து !
◆ அலைகடல் தூங்குவதில்லை, உனக்கு மட்டும்
அதிகாலை நித்திரை ஏன் ?
◆ அனுபவங்களை கைக்கொள்,
அதுவே ஆபரணங்களாகட்டும்
அணிந்துகொள் சிந்தையில் !
◆ விழி நீரோடு எதையும் எண்ணாதே !
வழி என்ன ? என எண்ணிடு !
◆ இன்று நூல்களை
இரவல் வாங்கியாவது படித்திடு !
◆ நாளை உனக்காக ஒரு
நன்னூல் கூட எழுதப்படலாம் !
◆ இரைதேடும் பறவைகள் கூட
இலக்குகளோடுதான் பயணிக்கின்றன
மனிதா நீ என்ன செய்கிறாய் ?
◆ நேர்மறை எண்ணம் கொண்ட
நபர்களை நண்பர்களாகக் கொண்டால்
நாளைய பொழுது உனதாகும்
◆ காலப் போக்கில்,
கரிமம் கூட
கனிமமாக மாறுவதை
கண்கூடாக பார்க்கிறோம் !
◆ நீயும் அதுபோல
நல்ல வைரமாகலாம் !
காத்திரு,
காலம் உனக்காக
கதைகளை வைத்திருக்கிறது !
◆ எழுந்து வா ! உனக்கு
ஏணி தேவையில்லை
எண்ணங்கள் போதும்
ஏற்றம் கொண்டிட !