லண்டன்: பஞ்சாப் வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாடு தப்பி சென்றவர் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு, லண்டனில் நடமாடும் வீடியோ வெளியான நிலையில், அவரை கைது செய்ய இந்திய அரசு இங்கிலாந்துக்கு வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து, நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு (2019) மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லண்டனில்கைது செய்யப்பட்ட நிரவ்மோடி, அங்குள்ள வாண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இந்திய அரசு சார்பில், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டு அரசிடம் வலியுறுத்திய நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.
அதே வேளையில், தன்னை ஜாமினில்விடுவிக்க வேண்டும் என்று நிரவ் மோடி தரப்பிலும், ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஜாமின் மனுக்களை விசாரித்த நீதிபதி சாமுவெல் கூஸீ, இந்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் ஆதாரப்பூர்வமான முறையீடுகள் மற்றும் எதிர்ப்பு காரணமாக, அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இங்கிலாந்து நாட்டின் சிறைவிதிகளின்படி, மோசடி குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட வேண்டும். அதன்படி நிரவ் மோடியும் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார். அவர்மீதான விசாரணை நடைபெறுவதும், அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதும் வழங்கமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்த வேண்டும் என அமலாக்கத்துறை பல்வேறு, கடந்த விசாரணைகளின்போது, பல ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்கிடையில், இந்திய அரசு சமர்ப்பித்த ஆவணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என நிரவ் மோடி தரப்பில் புதியதாக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் மல்லையாவின் வழக்கில் இந்திய அரசு வழங்கிய ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதை மேற்கோள் காட்டியதுடன், எனவே இந்த முறையும் இந்திய அரசு வழங்கிய ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த ஜனவரியில் நிரவ் மோடிக்கு எதிரான சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 25ந்தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், இன்று நீதிபதி சாமுவெல் கூஸீ பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.
நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என அனுமதி அளித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், 49 வயதான நிரவ் மோடியின் மோசடிக்கு முதன்மையான ஆதாரங்கள் இருப்பது உறுதியாகி உள்ளது என்று கூறிய நீதிபதி, வைர நகைக்கடைக்காரர் நிரவ் மோடியை ஜாமினில் வெளியே விட்டால், அவர் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடும் என்று இந்திய அரசாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் நிரவ் மோடிக்கு இந்தியாவில் உள்ள மருத்துவ ஏற்பாடுகள் ஏற்கத்தக்கவை, அவரை இந்தியாவுக்கு ஒப்படைத்தால் அவருக்கு நீதி மறுக்கப்படாது என்று நம்புவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]