பெங்களூரு:
பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) 10 ஆயிரம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஆன்லைனில் ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டது என்று சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த கசிவு குறித்த தகவல் அறிந்தவுடன் கார்டுகளை வங்கி நிர்வாகம் முடக்கியுள்ளது.
பெங்களூரு மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த ‘கிளவுட்ஸெக்’ என்ற சைபர் பாதுகாப்பு நிறுவன துணை நிறுவனர் ராகுல் சசி கூறுகையில், ‘‘பிஎன்பி.யின் சுமார் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் விற்பனைக்காக ‘டார்க் வெப்’ என்று வெப்சைட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதில் வாடிக்கையாளரின் பெயர், இமெயில், பாஸ்வேர்டு, கார்டு நம்பர், காலாவதி தேதி, வருடம், சிவிவி நம்பர் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருந்தது. இதன் விலை 4 முதல் 5 அமெரிக்க டாலர் என்று குறிப்பிடப்பட்டிருந்து. இந்திய மதிப்புக்கு சுமார் 300 ரூபாயாகும்’’ என்றார்.
டார்க் வெப்சைட்டை கூகுல், பிங் போன்ற தேடுதல் பொறி மூலம் இயக்க முடியாது. இது துப்பாக்கி, போதை பொருள் விற்பனை, தனிப்பட்ட நபர்களின் தகவல்களை திருடுதல், பண மோசடி போன்ற செயல்களில் ஈடுபடும் ஒரு வெப்சைட் என்பது குறிப்பிடத்தக்கது.