புதுடெல்லி: சாலைகளை கட்டுவிக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டு, நிறைவுசெய்யப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டுமென அந்த ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; ஆகஸ்ட் 17ம் தேதியிட்டு, பிரதமர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் நிரிப்பேந்திர மிஸ்ரா, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை செயலாளர் சஞ்சீவ் ரஞ்சனுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இந்த ஆலோசனை கூறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை ஆணையத்தின் இயக்க நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காகவே இந்த ஆலோசனைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டமிடப்படாத மற்றும் தேவைக்கதிகமான சாலை விரிவாக்கப் பணிகளால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன மற்றும் அதற்காக நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கும், கட்டுமானங்களுக்கும் அதிகம் செலவுசெய்ய வேண்டியுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சாலை உள்கட்டமைப்பு என்பது தற்போது அதிக செலவினம் கொண்டதாக மாறிவிட்டது. தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் கிரீன்ஃபீல்டு திட்டங்களிலிருந்து விலகிகொண்டுவிட்டன” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் இந்தக் கடிதம், சாலை திட்டங்களில் தனியார் துறையினரின் நன்மைக்காகவே என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.