டில்லி

பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளான நிருபேந்திர மிஸ்ரா மற்றும் பி கே மிஸ்ராவுடன் பதவி நீட்டிக்கபட்டு கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற மோடி இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ளார். அவருடைய அலுவலகத்தில் உயர் அதிகாரிகளாக நிருபேந்திர மிஸ்ரா மற்றும் பி கே மிஸ்ரா ஆகிய இருவரும் பணி புரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் பிரதமர் பல முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது உதவி வந்தனர். அத்துடன் பிரதமரின் அனைத்து நிகழ்வுகளையும் இருவரும் கவனித்து வந்தனர்.

நிருபேந்திர மிஸ்ரா உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து 1967 ஆம் வருடம் ஐஏஎஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். பிகே மிஸ்ரா என அழைக்கப்படும் பிரமோத் குமார் மிச்ரா குஜராத் மாநிலத்தில் இருந்து 1972 ஆம் வருடம் தேர்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இருவரும் பிரதமருக்கு கூடுதல் தலைமை செயலர்களாக இருந்தனர்.

தற்போது மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில் நிருபேந்திர மிஸ்ரா மற்றும் பிரமோத் குமார் மிஸ்ரா ஆகிய இருவருக்கும் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவருக்கும் கேபினட் அந்தஸ்து அளிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பதவி நீட்டிக்கப்பட்டு அவருக்கு கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.