பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரதமர் மோடி பேசும் சிறப்பு நிகழ்ச்சி வரும் 16ம் தேதிக்கு பதிலாக 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் எந்த பயமும் இன்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில், டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி வரும் ஜனவரி 16ம் தேதி பொங்கலுக்கு மறுநாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மாணவர்களுடன் உரைடுவார் என்றும், இந்நிகழ்ச்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி உரையாடுவதை முன்னிட்டு, விடுமுறை நாளான ஜனவரி 16ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களும் கட்டாயம் பள்ளிக்கு வந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களும் கட்டாயம் கலந்துகொள்வதை அந்தந்த மாவட்டத்தில் உள்ள கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் சமீபத்தில் உத்தரவிடப்பட்டது. ஆனால் அது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “பிரதமரின் உரையைக் காண, மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறவில்லை. பிரதமரின் உரையை மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம். பள்ளிக்கு வர மாணவர்களுக்கு விருப்பம் இருந்தால், அவர்களுக்குத் தக்க ஏற்பாடு செய்யக் கோரி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்படவில்லை” என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து விடுமுறை தினத்தன்று மாணவர்களுக்காக பிரதமர் மோடி பேசும் சிறப்பு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பிவந்த நிலையில், இந்நிகழ்ச்சியை வரும் 20ம் தேதிக்கு மாற்றி, புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “பொதுத்தேர்வை மாணவர்கள் எந்த பயமும் இன்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு உரையாற்ற உள்ளார். ஆனால் இந்நிகழ்வு ஜனவரி 16ம் தேதிக்கு பதில் 20ம் தேதி நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.